கொரோனாவில் இருந்து மீண்டதால் மகிழ்ச்சி : பஞ்சு மிட்டாய் சேல கட்டி...ஆஸ்பத்திரியில் பாட்டி குத்தாட்டம்

புனே: கொரோனாவையே வெத்திலையாக வாயில் போட்டு மென்று துப்பியது போன்ற மகிழ்ச்சியில், சிகிச்சையில் இருந்து மீண்ட பாட்டி ஒருவர், மருத்துவமனை வாசலில் அட்டகாசமான குத்தாட்டம் போட்டுவிட்டு வீட்டுக்கு சென்றார். மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே உள்ள மங்கள்வாத் பெத் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி (65, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அத்துடன் மூட்டு வலியும் இருந்தது. இந்நிலையில், கடும் மூட்டு வலியால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆந்த் சிவில் மருத்துவமனையில் இவர் சேர்க்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், கல்யாணிக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தது. இதனால் அவர் தனிமை வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், கல்யாணியின் உடல்நிலை மோசமானது. மூச்சு விடவும் கடும் சிரமப்பட்டார். இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை ேசர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதிசயமாக அவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா அவரை விட்டு பிரிந்தது. கல்யாணி பூரண குணமடைந்தார். அவர் வென்டிலேட்டர் உதவியின்றி தானாகவே சுவாசிக்க ஆரம்பித்தார். அத்துடன் அவரது மூட்டு வலியும் பெருமளவில் குறைந்திருந்தது.  கடைசியாக அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா நெகடிவ் வந்தது. இதையடுத்து, அவரை டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர்.

மிகுந்த மகிழ்ச்சியில் மருத்துவமனையில் இருந்து கிளம்பிய கல்யாணி, மருத்துவமனை வாசலுக்கு வந்ததும் உற்சாகம் அடைந்தார். கவலைகளை எல்லாம் மறந்த அவர், மருத்துவமனை வாசலில் திடீரென குத்தாட்டம் போட்டார். அவரது மகிழ்ச்சியை பார்த்து அவரை வழியனுப்பிய டாக்டர்கள், நர்ஸ்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.

Related Stories: