நல வாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி, பட்டு நெசவாளருக்கு 2,000: தமிழக அரசுஅறிவிப்பு

சென்னை:  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 பேருக்கு 2 தவணைகளாக தலா ₹1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்கள், தங்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத நெசவாளர்களுக்கும் நிவாரண தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களின் பட்டியல், விலையில்லா 200 யூனிட் மின்சாரம் பெற்று பயன்பெறும் நெசவாளர்களின் பட்டியலுடன் இணைக்கப்பட்டு, அதன் அடிப்படையில், ஏற்கனவே  வழங்கப்பட்டுள்ள உதவியை பெற்ற பட்டியலில் விடுபட்டுள்ள நெசவாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஊரடங்கு கால நிவாரண தொகையான ₹2 ஆயிரம் வழங்க கைத்தறி துறை இயக்குநர் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயனடையலாம்.

Related Stories: