தமிழகத்துக்கு 1,928 கோடி: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழகத்துக்கு ரூ.1928 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு நிதி பகிர்வின் ஏராளமான தொகை வர வேண்டியுள்ளது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து இதில் தாமதம் ஏற்படுத்தி வந்தது. இதை ஒவ்வொரு முறையும் டெல்லி செல்லும்போது மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பால் மாநிலங்கள் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால் உடனடியாக தங்களுக்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களுக்கான நிதி பகிர்வின் அடிப்படையில் தமிழகத்துக்கு ரூ.1928 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்தகவலை  டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இதில், அதிகபட்சமாக பாஜ ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.8255 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கோவாவுக்கு ரூ.177.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 28 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.46,038.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.  இதேபோல், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15வது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதிலும் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.816 கோடியும், பீகாருக்கு ரூ.502 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.330 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்தது.

Related Stories: