தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் விவசாய பணிகள் தொடக்கம்: கால்நடைகளை கிடை போட்டு, நிலங்களை உழுதனர்

கோவில்பட்டி: கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் பெய்து வரும் தொடர் கோடை மழையால், விவசாயிகள் விளைநிலங்களை உழுதும், கால்நடைகளை கிடைபோட்டும் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் ஆகிய வட்டாரங்களில் கடந்த புரட்டாசி மாதம் ராபி பருவத்தில் மானாவாரி விவசாயிகள் தங்களது நிலங்களில் மக்காச்சோளம், சிவப்பு சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, பருத்தி, மிளகாய், சூரியகாந்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டனர். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பயிர்கள் நன்றாக விளைந்ததையடுத்து, விவசாயிகள் அறுவடை செய்து, வீடுகளில் இருப்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் கோவில்பட்டி வட்டார கிராமங்களில் தற்போது அக்னி நட்சத்திர வெயில் தணிந்து அவ்வப்போது கோடை மழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையால் நிலங்களும் ஈரப்பதம் அடைந்துள்ளது. இதனால் அடுத்த பருவ விதைப்புக்கான ஆரம்ப கட்ட பணிகளை விவசாயிகள் செய்ய தயாராகி வருகின்றனர்.

இதையொட்டி விவசாயிகள் நிலங்களை மாடுகள் பூட்டியும், டிராக்டர் கொண்டும் கோடை உழவு செய்து வருகின்றனர். மேலும் நிலங்களிலங் ஆடு, மாடுகளை கிடை போட்டும், இயற்கை உரமிட்டும் வருகின்றனர். அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில் தற்போது வெயில் குறைந்து, பெய்து வரும் தொடர் மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.   மேலும் தென்மேற்கு பருவ காற்றும் துவங்க உள்ளது. இந்த கோடை மழையால் பெரும்பாலான விவசாயிகள், ஈரப்பதமாக உள்ள நிலங்களில் சீனி அவரை பயிரிட்டு வருகின்றனர். ஒரு சிலர் குறைந்தளவில் உளுந்து, பாசிப்பயறு பயிரிட்டு வருகின்றனர்.

சிறுதானியங்களுக்கு விலையில்லை

வரக்கூடிய பருவ ஆண்டிற்கான விவசாய பணிகளை தொடங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் பயிரிடப்பட்டு மகசூல் ஆன சிறுதானியங்கள், பயிறு வகைகள் போதிய விலை இல்லாமல் வீடுகளில் விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாய விளை பொருட்களுக்கான உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் விளைபொருட்களுக்கான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: