கன்டெய்னர் லாரிகளில் பயணம் 178 தொழிலாளர்கள் மீட்பு

முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற 178 புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  கடந்த இரண்டு மாதங்களாக நீடிக்கும் தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை அனுப்பி வைக்க சிறப்பு ரயில்களை மாநிலங்கள் ஏற்பாடு செய்துள்ளன. எனினும், பல தொழிலாளர்கள் விதிமுறைகளுக்கு மாறாக அங்கீகாரம் இல்லாத வாகனங்களில் செல்வது அதிகரித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் மட்டும் 3 கன்டெய்னர் லாரிகளில் சென்ற 178 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது.   

நேற்று முன்தினம் மாலை கன்டெய்னர் லாரி ஒன்று பஞ்சாபின் லூதியானா நோக்கி சென்றுகொண்டிருந்தது. உத்தரப் பிரதேசம், ஷாம்லி மாவட்டத்தில் கன்டெய்னர் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 78 தொழிலாளர்கள் இருந்தனர். இதனால், லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த தொழிலாளர்களை நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், முசாபர்நகரில் 60 தொழிலாளர்கள் கன்டெய்னரில் மறைந்து பயணம் செய்தனர். அவர்களை மீட்ட போலீசார், சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த மாநிலமான மேற்கு வங்கம் அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு முசாபர்நகர் மாவட்டத்தின் பாக்லா சோதனை சாவடி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் லாரி மூலமாக செல்ல முயன்ற 40 புலம் பெயர் தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.

Related Stories: