எய்ட்ஸ் நோய் போல் கொரோனாவும் மக்களைவிட்டு வெளியேற போவது இல்லை : கைவிரித்த உலக சுகாதார அமைப்பு

 ஜெனீவா : எய்ட்ஸ் நோய் போல் கொரோனா நோய் மக்களைவிட்டு போகாது என உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறி உள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், ஊரடங்கால் உலக பொருளாதாரமும் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து ஊரடங்கை தளர்த்தி பொருளாதார நிலையை மேம்படுத்தவும், இரண்டாவது அலை ஏற்படாமல் தடுக்கவும் உலக நாடுகள் போராடி வருகின்றன. இருப்பினும் கொரோனா பாதிப்பு தற்போதைக்கு முடிவுக்கு வராது என்றே வல்லுநர்கள் பலரின் கணிப்பும் உள்ளது

இவ்வாறான சூழ்நிலையில், கொரோனா வைரஸ் மனிதர்களுடனேயே நீண்ட காலம் இருக்கலாம் எனவும், எப்போதும் அழியாமலேயே போகலாம் என்றும் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடந்த காணொலி செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில்,

கொரோனா  வைரஸ் மனித சமூகங்களில் உள்ள மற்றொரு வைரஸாக மாறக்கூடும், நீண்ட காலம் இந்த வைரஸ் மனிதர்களுடனேயே இருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் பரவும் உட்பரவு வைரஸ்களில் ஒன்றாகவும் கொரோனா வைரஸ் மாறலாம். அத்துடன் இந்த வைரஸ் எப்போதுமே அழியாமலும் போகலாம். எச்.ஐ.வி. அழிக்கப்படவில்லை என்றாலும் அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை நாம் கண்டறிந்துள்ளோம். கொரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிப்பது கடினமாகவே உள்ளது

\ஊரடங்கை தளர்த்துவது கொரோனா வைரஸின் புதிய அலைகளைத் தொடங்குமா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அபாயங்கள் அதிகமாக இருப்பதால், இன்னும் வைரஸுக்கு எதிராக நாடுகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் . சுகாதாரப் பணியாளர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைத் தாக்குதல்கள் அதிக கவலை அளிக்கிறது. கொரோனா பாதிப்பு நம்மில் மிகச் சிறந்ததை வெளிப்படுத்துகிறது, ஆனால் இது மோசமான சிலவற்றையும் வெளிப்படுத்துகிறது,என கூறினார்.

Related Stories: