100 சதவீத வங்கி கடன்களையும் செலுத்திவிடுகிறேன்; எனக்கு எதிரான வழக்குகளை முடித்துவிடுங்கள்: மத்திய அரசிடம் விஜய் மல்லையா வேண்டுகோள்

லண்டன் : வங்கிகளில் தான் பெற்ற கடனை நூறு விழுக்காடு திருப்பிச் செலுத்துவதாகவும், அதை ஏற்றுக்கொண்டு தன்மீதான வழக்குகளை முடிக்க வேண்டும் என்றும மத்திய அரசுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.தொழிலதிபர் விஜய் மல்லையா ₹9 ஆயிரம் கோடி வங்கி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ., அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த விசாரணை தொடங்கிய  நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றார். தற்போது, லண்டனில் வசித்து வரும் அவரை நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்றதோடு, நாடு கடத்தும் தீர்ப்பை எதிர்த்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தார். இதை எதிர்த்த மல்லையாவின் மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கால்  இந்தியப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார மீட்புத் தி்ட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் பொருளாதார ஊக்குவிப்புக்கு இந்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை அறிவித்துள்ளதை விஜய் மல்லையா டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அரசுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களை நூறு விழுக்காடு திருப்பிச் செலுத்துவதாகவும், அதை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டு வழக்குகளை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் விஜய் மல்லையா டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: