மயிலாப்பூர் எம்எல்ஏ உதவியாளரும் பாதிப்பு: பெட்டிக்கடைக்காரர் குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: மயிலாப்பூர்  தொகுதி எம்எல்ஏ  உதவியாளர் மற்றும் ஜாபர்கான்பேட்டை பெட்டிக் கடைக்காரர் குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் 9க்கும் மேற்பட்ட மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், தூய்மை பணியாளர்கள் என பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னை வடபழனி, அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஆயுதப்படை காவலர்கள் 2 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவின் உதவியாளராக பணிபுரிந்து வரும் நபருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு முடிவுக்கு காத்திருக்கின்றனர். அவர் வசித்து வந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்தவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று ஜாபர்கான்பேட்டை அய்யாவு 4வது தெருவைச் சேர்lfத 48 வயது நபர் ஒருவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கடந்த 9ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது மனைவி, தாய், தந்தை, 2 மகன்கள், மருமகள் மற்றும் அவருடைய கடைக்கு வந்து பொருட்கள் வாங்கியவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் என அனைவரையும் கணக்கெடுக்கும் பணி நடந்தது. மேலும் அவருடைய குடும்பத்தில் உள்ள 6 பேரையும் தனிமைப்படுத்திய சுகாதார துறையினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். அந்த சோதனையில் முடிவில் அவர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 6 பேரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வசித்து வந்த பகுதி அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்தவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: