சீர்காழியில் பரபரப்பு; மதுபாட்டிலில் தவளை: குடிமகன்கள் அதிர்ச்சி

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் தென்பாதியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் குவார்ட்டர் ரம் பாட்டில்கள் வாங்கியுள்ளனர். வயல் பகுதிக்கு சென்று அந்த பாட்டிலை திறந்து பாதி மதுவை கப்பில் ஊற்றிவிட்டு மீண்டும் பாட்டிலை மூடும் போது உள்ளே ஏதோ மிதந்ததை கண்டனர். அதனை உற்று பார்த்தபோது, பாட்டிலில் தவளை ஒன்று இறந்து மிதந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் குடிக்க ஊற்றிய மதுவையும் கீழே ஊற்றிவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு வாங்கிய மது பாட்டிலும் இப்படி ஆகிவிட்டதே என புலம்பியபடி சென்றனர்.

ரம் பாட்டிலில் தவளை மிதந்த தகவல், மதுபான கடை ஊழியர்களுக்கு தெரிந்தது. இதனையடுத்து தகவல் வெளியே தெரியாமல் மறைக்க தவளையுடன் இருந்த மது பாட்டிலை பெற்றுக்கொண்டு உடனே புது மதுபாட்டிலை கடை ஊழியர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. மதுபாட்டிலில் தவளை கிடந்தது குறித்து நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பிகாபதியிடம் கேட்டபோது, இதுவரை தங்கள் கவனத்திற்கு இதுபற்றி தகவல் வரவில்லை என்றும், ஒயின் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் போது பரிசோதித்தே விற்பனை செய்ய உத்தரவிடபட்டுள்ளது.

ரம் போன்ற மது வகைகளில் நிறுவனங்களில் இருந்து வரும் போது ஏதேனும் தவறு நடைபெற்றிருக்கலாம். எனவே இனி வரும் காலங்களில் மதுபாட்டில்களை நன்கு பரிசோதித்தே வழங்க ஊழியர்களை அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.

Related Stories: