ஊரடங்கு முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளைதிறந்தது ஏன்? தமிழக அரசுக்கு விஜயகாந்த் கேள்வி

சென்னை:  தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளை மட்டும் திறக்க வேண்டியதன் அவசியம் என்ன. ஒவ்வொரு குடும்பத்தின் வருவாயை கருத்தில் கொள்ளாமல், அரசு தனது வருவாயை மட்டும் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், மதுப்பிரியர்களின் குடும்பத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கவும், குடும்ப வன்முறைகள் பெருகவும் டாஸ்மாக் கடைகள், காரணமாக அமைந்துவிடும். ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில்  டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை.

மதுக்கடைகளை திறக்கவேண்டும் என யாரும் கோரிக்கை விடுக்காத பட்சத்தில், அரசு தாமாக முன்வந்து டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அவசியம் என்ன? என்று அனைவரிடத்திலும் கேள்வி எழும்புகிறது.  மேலும், கடந்த 43 நாட்களாக ஊரடங்கை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தமிழக அரசுக்கு, மதுபானக் கடைகள் திறப்பின் மூலம் அவப்பெயரே கிடைக்கும் என்பதால், தமிழகத்தில் மதுக் கடைகளை மூட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: