விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்காததால் சாலையில் காய்கறிகளை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

* ஆந்திர முதல்வரின் சொந்த மாவட்டத்தில் அவலம்

திருமலை: ஆந்திர முதல்வரின் சொந்த மாவட்டத்தில் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்காததால், சாலையில் காய்கறிகளை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஜெகன்மோகனின் சொந்த மாவட்டமான கடப்பா மாவட்டம், பிரம்மகாரிமடத்தில் உள்ள கொள்ளபல்லி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளி, மாங்காய், உள்ளிட்ட காய்கறிகளை மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு சரக்கு வேனில் ஏற்றி கொண்டு வந்தனர்.

ஆனால் விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை பத்வேல் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தாங்கள் ஏற்றி வந்த பொருட்களை சாலையில் கொட்டி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், `வெயில் காலத்தில் போர்வெல்லில் தண்ணீர் இல்லாமல் பல லட்ச ரூபாய் கடன் பெற்று ஆழ்துளை போர்வெல்லை அதிகப்படுத்தி விவசாயம் செய்தோம். ஆனால் தற்போது நாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்று கூறினால் நாங்கள் எங்கு செல்வோம். எங்கள் வாழ்வை எவ்வாறு நடத்துவது. எனவே, அரசு இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’’’ என்றனர்.

Related Stories: