ஏரிகள், குளங்களில் இருந்து விவசாயிகள் களிமண், வண்டல் மண் இலவசமாக எடுக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஏரிகள், குளங்களில் இருந்து விவசாயிகள் களிமண், வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீர் கட்டமைப்புகளை மக்கள் பங்களிப்புடன் தூர்வாரி அவற்றின் கொள்ளளவினை மீட்டெடுக்க முதல்வர் ‘குடிமராமத்து திட்டம்’ 2017-ல் தொடங்கப்பட்டது.

இதனால், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் ஆதாரங்களில், பருவ மழையின்போது வழக்கத்தை விட நீர் அதிகம்தேக்கப்பட்டு விவசாயத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.இந்த நீர் நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு வழங்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த கடந்த 2017 ஏப்ரல் 27ம் தேதி அரசாணை வெளியிட்டது.

இந்த திட்டத்தின் மூலம், இதுவரை 6,69,900 விவசாயிகளும், மண்பாண்ட தொழில் புரிவோரும் பயன் பெற்றுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கில் இருந்து விவசாய பணிகளுக்கு ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் பாசனத்திற்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பதால், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விலையில்லாமல் தங்கள் கிராமத்திலோ அல்லது அருகாமை கிராமத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம்.

Related Stories: