ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட குடும்ப வன்முறையில் 1,000 பெண்கள் படுகொலை : மெக்ஸிகோவில் திடுக்கிடும் தகவல்

மெக்ஸிகோ : மெக்சிகோ நாட்டில் கொரோனா பரவிய கடந்த 3 மாதங்களில் குடும்ப வன்முறையில் சுமார் 1,000 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.சுமார் 13 கோடி மக்கள் தொகை கொண்ட வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் குற்றச்செயல்கள் நடக்காத நாளே கிடையாது என்று கூறும் அளவுக்கு வன்முறை நிகழும். இந்த நிலையில்தான், ரத்தம் குடிக்கும் காட்டேரியாக உலகில் உலா வரும் கொரோனா வைரஸ் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மெக்சிகோவுக்குள் புகுந்து கடந்த மாதம் வேகம் பிடித்தது. இதனால் மார்ச் 2-வது வாரத்துக்கு பிறகு மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓப்ரடார் ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதுவரை அங்கு கொரோனாவால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியும் உள்ளனர்.

 

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாததால் 24 மணி நேரமும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இது, பல்வேறு வழிகளில் குடும்ப வன்முறையை அதிகரிக்க செய்துள்ளது.கணவன் மனைவி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் தினமும் சண்டை போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற மோதல்களால் கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் மெக்சிகோவில் 988 குடும்பத் தலைவிகள், இளம்பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இக்கோரச் சம்பவம் குறித்து மெக்சிகோ நாட்டின் மகளிர் அமைப்புகள், சமூக தொண்டு நிறுவனங்கள் கூறுகையில், “பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும், கொலைக்குற்றங்களும் நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க அதிபர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.ஆனால் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடார் இதை மறுத்துள்ளார். “பெண்களுக்கெதிரான குற்றங்கள் எப்போதும் போல நடந்தவாறுதான் உள்ளது. ஊரடங்கு காலத்தில்தான் பெண்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுவதாக கூறுவது தவறு. அரசியல் எதிரிகள் எனது செல்வாக்கை சீர்குலைக்கும் விதமாக மகளிர் அமைப்புகளை தூண்டிவிடுகின்றன“ என குற்றம் சாட்டுகிறார்.

Related Stories: