பாதுகாப்பு பணிக்கு சென்றபோது மொபட் மீது டேங்கர் லாரி மோதி ஆயுதப்படை பெண் காவலர் பலி: மெரினா காமராஜர் சாலையில் பரபரப்பு

சென்னை: தென்காசி மாவட்டம் செட்டியார் கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (22). தமிழக காவல் துறையில் கடந்த 2017ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டு, தற்போது எழும்பூர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக சாந்தோம் பகுதியில் பள்ளி மாணவர்களின் விடைத்தாள் வைத்திருக்கும் கட்டிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று ஆயுதப்படை உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, தனது மொபட்டில் பணிக்கு புறப்பட்டார்.   திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருந்து மெரினா காமராஜர் சாலையில் வலதுபுறம் திரும்பியபோது, மேடவாக்கத்தில் இருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டேங்கர் லாரி, பவித்ரா மீது மோதியது.  

இதில், மொபட்  லாரி சக்கரத்தில் சிக்கி 15 அடி தூரத்துக்கு இழுத்து சென்றதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் ராஜசேகர் (24) என்பவரை கைது செய்தனர். டேங்கர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலர், லாரி மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: