பாரத்நெட் திட்டத்திற்கு தடைவிதிக்கும் கடிதம் குறித்து பொய்யாகவும், திரித்தும் அறிக்கை விடுகிறார் அமைச்சர் உதயகுமார்: திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அறிக்கை

சென்னை:  பாரத்நெட் திட்டத்திற்கு தடைவிதிக்கும் கடிதம் குறித்து, பொய்யாகவும், திரித்தும் அறிக்கை விடுகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்று திமுக துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: அதிமுக அரசின் ரூ.1,851 கோடி ரூபாய் “பாரத் நெட்” திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உண்மையை மறைத்து இருக்கிறார். “மார்ச் 2021க்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று மத்திய அரசு கூறியிருக்கிறது என்று ஒரு “நொண்டிச் சாக்கு” கூறியிருக்கிறார் அமைச்சர். மத்திய அரசின் கெடு என்பதை விட-இந்த டெண்டரில் ஒளிந்திருப்பது, அமைச்சர் தனது “நாற்காலி”யை விட்டுப் போகும் முன்பு இந்த திட்டத்தில் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்ற ரகசிய நோக்கம் தானே! அதுதானே உண்மை!

“பாரத்நெட்” டெண்டரின் ஒட்டுமொத்த குழப்பமும்-முறைகேடுகளும் அரசு கஜானா மூலம் “திரவியம்”தேட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் உருவானதுதானே! அமைச்சர் உதயகுமார் இதை இல்லையென்று மறுக்க முடியுமா?.  அமைச்சர் உதயகுமார் சொல்வதுபோல் இந்த டெண்டரில் ஒன்றுமே நடக்கவில்லை என்றால், விரிவான அறிக்கையை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம்”என்று “பொய்யயுரைக்கு” இடையிலும் ஒரு மெய்யுரையை தனது அறிக்கையில் நிகழ்த்தியிருப்பது ஏன்?. பாரத்நெட் திட்டத்திற்கு “எழுத்து பூர்வமாக  மத்திய அரசு முத்திரையுடன் உள்ள கடிதத்தில் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நிச்சயம் அவரால் மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. அப்படிச் செய்ய நினைத்தால் “முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட”கதையாகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: