குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை: மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனே பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர், கோவை, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு என்று அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்தன. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் முற்றிலும் நிலை குலைந்துள்ளன.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள இந்த தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊரடங்கு என்ற மூச்சுத்திணறலில் இருந்து மீண்டு, தொழில் தொடங்கவும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை மீண்டும் வழங்க பின்வரும் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனே பரிசீலித்து நிறைவேற்ற கேட்டுக் கொள்கிறேன்.  மீண்டும் தொழில் தொடங்கவும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் இந்த நிறுவனங்களின் நடைமுறை மூலதனம் மற்றும் ரொக்கக் கடன் வழங்கும் வரம்பை 25 சதவீதம் உயர்த்தி, குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.

கேரளாவை போல, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்1 முதல் 2 சதவீதத்தை இந்த நிறுவனங்களுக்கு நிவாரணமாக அறிவிக்க வேண்டும். இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் பணிக்க செல்ல அனுமதிச் சீட்டை கிராம நிர்வாக அலுவலரோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளோ வழங்க வேண்டும். மின்கட்டணம், தண்ணீர்க் கட்டணம், மற்றும் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் செலுத்த 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும், 6 மாதங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூலைத் தள்ளி வைத்து, அந்த பாக்கியை 2 ஆண்டில் மாத தவணையில் செலுத்த அனுமதிக்க வேண்டும். கடந்த ஆண்டு செலுத்திய சரக்கு, சேவை வரியில் இருந்து 10 சதவீதத்தை நிறுவனங்களுக்கு திரும்பி தரவேண்டும்.

10 லட்சம் வரையிலான பருவம் சார் கடன்களுக்கு வட்டி கட்டும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். ஊரடங்கிற்கு பிறகு நிறுவனங்கள் தொழில் தொடங்கி 30 சதவீத மானிய கடன் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தைத் தொழிலாளர் ஈட்டுறுதி மூலம் மத்திய அரசு வழங்கிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: