வட கொரியா-தென் கொரியா எல்லையில் துப்பாக்கிச் சூடு: தென்கொரியா முப்படை தளபதி தகவல்

சியோல்: வட கொரியா-தென் கொரியா ஆகிய இரு நாடுகளின் எல்லையிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் ராணுவ நிலைகள் மீது வட கொரியா அத்துமீறி நேற்று காலை தாக்குதல் நடத்தியது. தென் கொரியாவும் இதற்கு தக்க பதிலடி  கொடுத்துள்ளது. இதுகுறித்து தென் கொரியாவின் முப்படைகளின் தளபதி கூறியதாவது: தென் கொரியாவில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலைகள் மீது வட கொரியா திடீரென நேற்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தியது.  துப்பாக்கி சூட்டை தவிர்ப்பதற்காக இது குறித்து தெரிவிக்க வட கொரிய ராணுவத்தை தொடர்பு கொண்டோம். அவர்கள் பதிலளிக்கவில்லை. அதன்  பின்னரே, பதிலடி கொடுக்கும் வகையில், தென் கொரியா இரண்டு சுற்று துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில் தென் கொரிய தரப்பில் எந்த விதமான  உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. அதேபோல, வட கொரியாவில் இழப்பு எதுவும் ஏற்பட்டதா என தெரியவில்லை. ஆனால் இதுவரை இது குறித்து  எவ்வித தகவலையும் வட கொரியா வெளியிடவில்லை.எல்லையில் ராணுவ பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கையாக வட கொரியா, தென்  கொரியா இடையே 2018ம் ஆண்டு பியோங்யாங்கில் நடந்த உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதி நிலவி வந்த நிலையில், மாயமான வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் மூன்று வாரங்களுக்கு பின்னர்  தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்ற மறுநாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: