புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்புவதில் அக்கறை காட்டவேண்டும்: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: புலம்பெயர்த்  தொழிலாளர்கள் தமது ஊர்களுக்குத் திரும்ப மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்ததன் அடிப்படையில், அது தொடர்பான பணிகளைப் பல்வேறு மாநில அரசுகள் துவக்கியுள்ளன. தமிழக அரசின் சார்பிலும் அதற்கென அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையில் தமிழ்நாட்டில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் விரைவாக தம்மை சொந்த ஊருக்கு அனுப்பும்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு ஏற்பாடு செய்வதில் தமிழக அரசு அக்கறையும், கவனமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 5 லட்சம் பேர் இப்போது முகாம்களில் உள்ளனர்.  அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு இதுவரை தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது தெரியவில்லை. அதுபோலவே பிற மாநிலங்களில் சிக்கிக் கொண்டுள்ள தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் பின்னரே ஊர்களுக்கு அனுப்ப வேண்டும். நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

Related Stories: