விருதுநகர்: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் ஊரடங்கு காரணமாக, மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து, உணவுப்பொருட்களின் விற்பனை சரிந்துள்ளது. ஊரடங்கு துவக்கிய மார்ச் 25 முதல் ஏப்.15 வரை உணவு பொருட்களை உயர் மற்றும் நடுத்தர மக்கள் போட்டி போட்டு வாங்கினர். கூலி வேலை செய்யும் அடித்தட்டு மக்கள் வேலைக்குச் செல்லாத காரணத்தால், பணப்புழக்கம் குறைந்து உணவு பொருட்கள் விற்பனை சரிவை கண்டு வருகிறது. மக்களிடமும் வாங்கும் திறன் குறைந்து வருகிறது. வட மாநிலங்களில் இருந்து விருதுநகர் மார்க்கெட்டிற்கு தினமும் 100 முதல் 150 லாரி பருப்பு, பயறு, மல்லி, வத்தல், மளிகை வரத்து இருந்தது. தற்போது தினமும் வரத்து 20 லாரிகளுக்கும் குறைவாக உள்ளது. கடுகு, வெந்தயம், சோம்பு, மல்லி, வத்தல் உள்ளிட்ட மளிகை வரத்து முற்றிலும் இல்லை. ரேசன், அம்மா உணவகம், கூட்டுறவு அங்காடிகளுக்கு அனுப்பிய உணவு பொருட்களுக்கு பணம் வழங்காததால், மொத்த வணிகர்கள் பணப்புழக்கம் இல்லையென தெரிவிக்கின்றனர். அனைத்து தொழில்களும் ஊரடங்கால் முடங்கி இருப்பதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து வாங்கும் திறன் குறைந்து விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.
