கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பு ஊதியம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 5000 உதவித்தொகை

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ஐயாயிரம் ரூபாய் உதவித் தொகையும், கொரோனா தடுப்புப் பணிக் களத்தில் முன்னணி வீரர்களாகப் பணி புரியும், மருத்துவத் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: இரண்டு வார காலம் ஊடரங்கு நீட்டிக்கப்படும் போது, இதனால் தொடர்ந்து பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிறப்புக் குழு அமைத்து, அனைத்துத் தரப்பினரின் பிரச்சினைகளையும் ஆராய்ந்து சமூக, பொருளாதார, வாழ்வியல் தேவைகளுக்கான உதவிகளை மத்திய - மாநில அரசுகள் செய்துதர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

மார்ச் 22ம் தேதி மக்கள் ஊரடங்கும், அதன் பிறகு மார்ச் 25ம் தேதி முதல் தற்போது வரை, ஏறத்தாழ இரண்டு மாத காலம் என்பது, அன்றாடங் காய்ச்சிகள், கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், வார ஊதியம் பெறுபவர்கள், சிறு வியாபாரிகள், குறு நிறுவனங்களில் பணியாற்றுவோர், நெசவாளர்கள் ஆகிய பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் நீண்ட கேள்விக்குறிக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் மிகுந்த சோதனையான காலம். அவர்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடுகள் நிச்சயம் போதுமானது அல்ல. ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையை அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

தமிழக முதல்வரின் எடப்பாடி தொகுதியில் கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தினர் கஞ்சி மட்டுமே குடித்து வாழ்க்கை நடத்தும் அவலம் இருப்பதாக ஒரு செய்தி படித்தேன். ஐயாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கி அவர்களைக் கைதூக்கி விடப்போகிறதா அல்லது கைவிட்டுவிடப் போகிறதா?

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொடர்பான சளி பரிசோதனை செய்திட தொண்டையிலிருந்து சளி எடுக்கும் நைலான் குச்சி தட்டுப்பாடு என்றும், இதனால் சளி பரிசோதனை செய்ய வந்தவர்களைத் திருப்பி அனுப்பினார்கள் என்றும், சளி எடுக்கும் நைலான் குச்சி மறுநாள் வரவுள்ளதால் அதன்பிறகு வருமாறு கூறினார்கள் என்றும் செய்தி பார்த்தேன். இதுபோன்ற தகவல்கள் அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகின்றன.

காவல்துறையினர், மருத்துவத்துறை டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட லட்சக்கணக்கான ஊழியர்கள் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் திமுகவினர், இயன்றவரை உணவு மற்றும் மருந்துப் பொருட்களை உதவி கேட்பவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். “ஏழைகளுக்கு உணவளிப்போம்” - என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தின் 25 நகரங்களில் உணவு தயாரித்து தன்னார்வத் தொண்டர்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு உணவும் வழங்கி வருகிறோம்.  ஊரடங்கில் சிக்கி - குறைந்தபட்ச வருமானமே இல்லாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பவர்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த இயலாது.

ஆகவே அரிசி பெறும் ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மின்சாரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்.  இவை அரசைக் குறை சொல்வதற்காகவோ, அரசியலுக்காகவோ சொல்லப்படுபவை அல்ல; குறைகாண முடியாத அரசாக - எல்லோருக்குமான அரசாக மாற்றிக் கொள்ளுங்கள் என்பதற்காக அக்கறையுடன் சொல்லப்படு பவை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் சிறப்பு கவனம் தேவை

ராயபுரம், திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கண்ணகி நகர், செம்மஞ்சேரி,  பெரும்பாக்கம், எழில் நகர், நாவலூர், கூடப்பாக்கம், எண்ணூர் சுனாமி காலனி  உள்ளிட்ட மற்றும் பிற பகுதி மக்களுக்கும் மிகவும் கவனமாகப் பாதுகாப்பு  அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் ஒவ்வொரு வீட்டுக்கும் இடைவெளி அரை அடி கூட இல்லை, வீட்டுக்குள் நீரில்லை, கழிவறை வெளியில் உள்ளது இப்படிப்பட்ட சூழலில், தனிமனித இடைவெளி, கை கழுவுதல் என்பவற்றைக்  கடைப்பிடிக்க இயலாத நெருக்கடியான நிலையில் வாழ்கிறார்கள். மிகக் குறுகிய இடத்தில் அதிக மக்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் உணவிற்காக,  வாழ்வாதாரத்துக்காக வெளியே வரத் தொடங்கினால், மிகவும் ஆபத்தான நிலைதான்  ஏற்படும். எனவே தமிழக அரசு இந்தக் குடியிருப்பு பகுதிகளில் உடனே கவனம்  செலுத்தி, உணவுப்பொருள் மற்றும் குறைந்தபட்சத் தேவைகள் அனைத்தையும்  வீடுகளிலேயே கொண்டு சேர்க்க வேண்டும். மருத்துவ அலுவலர்கள் முழுமையாக பணியில்  இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் தனியாகச் சிறப்பு அலுவலர்களை நியமித்து, தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படிப் பகுதி பகுதியாக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

Related Stories: