பத்மாவதி பரிணய உற்சவம் தற்காலிக நிறுத்தம்; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூன்30 வரை பக்தர்களுக்கு தடையா?... தேவஸ்தானம் விளக்கம்

திருமலை: திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா அச்சம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதம் 20ம் தேதி முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சுவாமிக்கு வழக்கம்போல் அனைத்து நித்ய பூஜைகளும் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் ஆந்திர அரசு உத்தரவுப்படி ஜூன் 30ம்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அதுபோன்ற எந்தவித முடிவையும் எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்குமா? என தெரியவில்லை.

அரசின் அறிவிப்புகள் பொறுத்தே தேவஸ்தானம் முடிவெடுக்கும். ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டாலும் உடனடியாக பக்தர்களை அனுமதிக்க முடியாது. எந்த அளவிற்கு சமூக இடைவெளி இருக்க வேண்டும், எவ்வாறு பக்தர்களை அனுமதிக்க  வேண்டும் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஆலோசனைக்கு ஏற்ப அறங்காவலர் குழு தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நாராயணகிரி பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும்  பத்மாவதி பரிணயம் (திருக்கல்யாணம்) இந்த ஆண்டு மே 1ம் முதல் 3ம்தேதி வரை ஜீயர்கள் முன்னிலையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த உற்சவத்திற்கு சுமார் 80 ஊழியர்கள் தேவைப்படும்.  சமூக இடைவெளி கடைபிடிக்காமல் போய்விடும் என்பதால் இந்த உற்சவத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகம ஆலோசகர்கள் மற்றும் அர்ச்சகர்களுடன் நடத்திய ஆலோசனையில் சர்வாரி ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் இந்த உற்சவத்தை நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். எனவே சகஜ நிலை திரும்பிய பிறகு ஒரு நல்ல நாளில் பரிணய உற்சவம் மிக பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ இவ்வாறு கூறினார்.

Related Stories: