கொரோனா ஒருபுறம்; நாற்காலி ஒருபுறம்; மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே நீடிப்பாரா?...மவுனம் காக்கும் ஆளுநர்

மும்பை: மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணிக்கு முறையே 105 மற்றும் 56 இடங்கள் என  பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இந்த கூட்டணி முறிந்தது. தொடர்ந்து, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ்  ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைத்தது. மாநில முதல்வராக, கடந்த ஆண்டு நவம்பர், 28-ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.

ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மாநில முதல்வராக பதவியில் இருப்பவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.,யாக இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஆறு மாதங்களுக்குள், எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.எல்.சி.,யாகவோ தேர்ந்தெடுக்கப்பட  வேண்டும். ஆனால், சிவசேனா கட்சி தலைவராக மட்டுமே உத்தவ் தாக்கரே தற்போது வரை உள்ளார். இந்நிலையில், வரும் மே 27-ம் தேதியுடன், உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று, ஆறு மாதங்கள் நிறைவு பெறுகிறது. இந்த  வேலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக உள்ள, ஒன்பது எம்.எல்.சி., இடங்களுக்கு, கடந்த, 24-ம் தேதி, தேர்தல் நடந்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், போட்டியிட்டு, எம்.எல்.சி.,யாக தேர்வு பெற உத்தவ் முடிவு செய்திருந்தார். ஆனால்,  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எம்.எல்.சி., தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த, 9ம் தேதி, மும்பையில் நடந்த மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில், மாநில கவர்னருக்கான, இரண்டு எம்.எல்.சி., இடங்கள் ஒதுக்கீட்டில், ஒரு இடத்தில், உத்தவை நியமிக்க வேண்டும் என, கவர்னர், கோஷ்யாரிக்கு  கோரிக்கை விடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், கோரிக்கை குறித்து ஆளுநர் இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, நேற்று மீண்டும் மாநில அமைச்சரவை கூட்டம், நடைபெற்றது. கூட்டத்தில்,முதல்வர் உத்தவ் தாக்கரேவை எம்.எல்.சி,.யாக நியமிக்க, கவர்னருக்கு, இரண்டாவது முறையாக பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் தாக்கரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மே.,27ம் தேதிக்குள், உத்தவை, எம்.எல்.சி.,யாக ஆளுநர் நியமிக்கவில்லை என்றால், முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: