ஓட்டல்கள் மூடல், ஆன்லைன் டெலிவரியும் கட் ஐதராபாத் ஹலீம் இல்லாத ரமலான்

* ஐதராபாத் நிஜாம்களால் ஆளப்பட்டபோது, அரபு சவுஷ் மக்களால் அறிமுகப்படுத்தப் பட்டதுதான் இந்த ஹலீம் என்கின்றனர்.

* ஐதராபாத் ஹலீமுக்கு 2010ல் புவிசார் குறியீடு கிடைத்தது. சுமார் 200 உணவகங்களில் இந்த ஸ்பெஷல் உணவு விற்கப்படுகிறது.

* ஹலீமை சிலர் சிக்கனில் செய்கின்றனர்.  ஆனாலும், மட்டன் ஹலீம்தான் பாரம்பரியமானது. அதுவும், எலும்போடு உள்ள கறியை போட்டு, எலும்பின் சாறும் இறங்கினால்தான் படு ருசி.

ஐதராபாத்: ஊரடங்கால் ஐதராபாத் ஸ்பெஷல் ஹலீம் சுவைக்க முடியாமல், முஸ்லிம்கள் மட்டுமல்ல... ஹலீம் ரசிகர்களும் திண்டாடி வருகின்றனர்.

 சார்மினார், பலக்னுமா அரண்மனை, கோல்கொண்டா கோட்டை, பிரியாணி, கபாப் மட்டுமல்ல, ஹலீமுக்கும் ஐதராபாத் படுபேமஸ். அதென்ன ஹலீம்...? இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்கி விட்டது. நண்பர்கள், உறவினர்களுக்கு ஈத் விருந்து அளிக்க முஸ்லிம் மக்கள் தயாராகிவிட்டனர். பிரியாணி, சிக்கன், மட்டன் ரெசிப்பிக்கள், சேமியா, பாயசம் என பல வகை உணவுகள் இதில் இடம்பெறும். இதில் அசைவ பிரியர்கள் எல்ேலாராலும் விரும்பப்படும் ஒன்றுதான் ஹலீம். இது வேறொன்றும் இல்லை. கோதுமை, பயறு, ஆட்டிறைச்சியை வைத்து சமைக்கப்படும் கஞ்சி போன்ற உணவுதான். சாதாரண இறைச்சி உணவைப்போல இதை கருதி விட முடியாது.

 ஐதராபாத் ஸ்பெஷல் இது. ஆனால், நாடு முழுவதும் இதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, டெல்லி சாந்தினி சவுக் பகுதியிலும் இது பேமஸ் டிஷ்ஷாக வலம் வருகிறது. அட்டகாசமான சுவை கொண்டது இந்த ஹலீம். இதன் சுவையில் மயங்கியவர்கள் ஏராளம். ஆனால், இதை ருசிக்க  ஆசைப்படுவோருக்கு நிறைய பொறுமை அவசியம். கோதுமையை ஊறவைத்து, பிரியாணி இலை, கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்ட கமகம மசாலாக்களையும் சேர்த்து இதை தயார் செய்ய 6 முதல் 8 மணி நேரம் ஆகிவிடும்.  இதனால், பெரும்பாலானோர் ரமலானில் நோன்பு முடித்ததும் ரமலான் கஞ்சியோடு, இந்த ஹலீமை ரெஸ்டாரன்டில் ருசிக்கின்றனர்.  முஸ்லிம் அல்லாதவர்களும் மாலையில் ஹலீம் ஸ்பெஷல் ரெஸ்டாரன்ட்டுகளில் குவிந்து விடுகின்றனர். ஆனாலும், இந்த ரமலானில் இது பலருக்கு கொடுத்து வைக்கவில்லை. கொரோனாதான் இதற்கெல்லாம் காரணம். கொரோனாவால் ஓட்டல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன.

ஹலீம் தயாரிக்க குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் ஆகும் என்பதால் ஆன்லைன் ஆர்டர் மூலம் விநியோகம் செய்யவும் வழியில்லை என ஓட்டல்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் ஹலீம் தயாரிக்கப் போவதில்லை என ஐதராபாத் ஹலீம் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பிரபல ஓட்டல்கள் தெரிவித்துள்ளன.  இது உணவகங்களுக்கு மட்டுமல்ல… முஸ்லிம்களுக்கும், ஹலீம் ருசியில் மயங்கிய ரசிகர்களுக்கும் சோகம். கடந்த ரமலானில் ஹலீம் ருசியில் மயங்கிக்கிடந்த அவர்கள், தற்போது ஏக்கத்தில் தவிக்கின்றனர். அது சரி, யூடியூபில் பார்த்து வீட்டிலேயே தயாரிக்க முடிவு செய்து வீட்டீர்களா… கோதுமை ஊறும் நேரம், பருப்பு, மசாலா, மிதமான தீயில் வேக விடுவது என பல சமையல் நுட்பங்கள் இருக்கு பாஸ். பக்குவம் மாறிடக்கூடாது பாத்துக்கோங்க. அப்பதான் வாயில் போட்டதுமே கறியும் கரையும்... மனசும் நிறையும்.

பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அவுட்

ஐதராபாத்தில் பிஸ்தா ஹவுசில் மட்டும் ஹலீம் விற்பனையை நம்பி சுமார் 30,000 பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதுபோல் ஷா கோஸ் என்ற மற்றொரு உணவகத்தில் 10,000 பேருக்கு வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி, பிற சிறிய ஐதராபாத் ஹலீம் உணவகங்களில் பல ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஐதராபாத் மற்றும் அருகில் உள்ள நகரங்களில் 6,000 பேர் ஹலீம் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுளளனர். ரமலான் மாதத்தில் மட்டும் ஹலீம் தயாரிப்பு, பேக்கிங், விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுமார் 10,000 முதல் 25,000 சம்பாதிக்கிறார் என்கிறார் ஐதராபாத்தில் உள்ள பிரபல ஹலீம் உணவக சமையல் கலைஞர். ரமலான் மாதத்தில் மட்டும் சுமார் 1,000 கோடி வியாபாரம் நடக்குமாம். அதில் இந்த ஹலீம் தயாரிப்பில் மட்டும் 500 கோடி.

Related Stories: