ஊரடங்கு நேரத்தில் அனுமதி வழங்கினால் கருடா மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஒப்பந்த நிறுவனம் ஆணையாளரிடம் வேண்டுகோள்

திருமலை: ஊரடங்கு நேரத்தில் திருப்பதி கருடா மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கினால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று ஒப்பந்த நிறுவனம் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருப்பதி நகரில் பொதுமக்கள் வாகனங்களுடன், ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினமும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வாகனங்கள் வரை வந்து செல்வது வழக்கம். இதனால் திருப்பதி நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருச்சானூர் பைபாஸ் சாலை  முதல் அலிபிரி வரை கருடா மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருமலை- திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் இணைந்து இந்த கருடா மேம்பாலம் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு தொடங்கியது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக இந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படக்கூடிய பேருந்து நிலையம், ராமானுஜர் சந்திப்பு, பூரணகும்பம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் தூண்கள் அமைக்கும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை.

தற்போது போக்குவரத்துகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருவதால் ராமானுஜர் சந்திப்பு முதல் பூரணகும்பம் சந்திப்பு வரை தூண் அமைக்கும் மேம்பாலப் பணிகளை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என ஒப்பந்தம் எடுத்த ஆப்கான் நிறுவனம் மாநகராட்சி ஆணையாளர் கிரிஷாவிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஊரடங்கால்  ₹90 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள், 350 ஊழியர்கள், 80 நிபுணர்கள் என அனைவரும் வேலையின்றி இருக்கின்றனர். 14ம் தேதியோடு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என்று எதிர்பார்த்து ஊழியர்கள் அனைவரையும் இங்கேயே வைத்து இருந்த நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் வேலையாட்கள் அனைவரும் என்னசெய்வதென்று தெரியாமல் உள்ளனர். தற்போது போக்குவரத்து இல்லாமல் சாலைகள் முழுவதும் காலியாக இருக்கக்கூடிய இந்த நேரத்தில் பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கினால் விரைந்து முடிக்கப்படும்.

குறிப்பாக எம்.எஸ் சுப்புலட்சுமி சிலை சந்திப்பு முதல் ராமானுஜர் சந்திப்பு வரை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் இருந்து 40 அடி நீல தூண் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. சாதாரண நாட்களில் மூன்று முதல் நான்கு மாதங்களாக கூடிய இந்த தூண்கள் அமைக்கும் பணி தற்போது தொடங்கினால் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாமல் இருக்கும். மேலும், ஊரடங்கு நிபந்தனைகளை மீறாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து கூலித்தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கூடாமல் இயந்திரங்கள் மூலம் பணிகளை செய்ய உள்ளதாகவும், எனவே கருடா மேம்பால பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் கிரிஷா இதுபற்றி கலெக்டர் நாராயண பரத்குப்தாவிடம் கூறுவதாகவும் அவர் எடுக்கும்  முடிவின்படி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒப்பந்த நிறுவனம் கூறியபடி தற்போது பணிகளை தொடங்கினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும், மேம்பாலப் பணியும் விரைந்து முடிக்கப்படும். இது நல்ல ஆலோசனையாக உள்ளதால் கலெக்டரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாக ஆணையாளர் தெரிவித்தார்.

Related Stories: