பட்டுப்போன பட்டு தொழில் நைந்து போன நெசவாளர் வாழ்க்கை: கமலநாதன், காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்க இயக்குநர்

உலகப் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் இருந்தும் ஏராளமானோர் வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த பட்டுச்சேலைகள் தயாரிப்பில் காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான ராஜாம்பேட்டை, அய்யம்பேட்டை, புஞ்சை அரசன்தாங்கல், அய்யங்கார்குளம் உள்ளிட்ட பகுதிகளைச்  சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்க நெசவாளர்கள், 25 ஆயிரம் தனியார் நெசவாளர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து சூன்யமாக்கி இருக்கிறது.  கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் மெல்ல தலைகாட்டிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

கடந்த 1 மாதமாக நெசவாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். ஏற்கனவே ஆன்லைன் வியாபாரம், கோரா, பட்டு, ஜரிகை விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி, போலி பட்டுப்புடவைகள் போன்ற காரணங்களால் பட்டு நெசவுத் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கால் வேலை இல்லாமல் குழந்தைகளுடன் நெசவாளர்கள் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி தவித்து வருகின்றனர். மேலும் அரசு அறிவித்த எந்த உதவித்தொகையும் இதுவரை நெசவாளர்களுக்கு வந்து சேரவில்லை. தொடர்ந்து அவர்களுக்கு வேலை இல்லாத நிலையில் அவர்கள், நெய்த சேலைகளை கூட விற்பனை செய்ய முடியவில்லை.  இதனால் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அரசின் உதவித்தொகையை எதிர்பார்த்து நெசவாளர்கள் பரிதாபத்துடன் காத்திருக்கின்றனர்.

பொங்கல் பண்டிகை முடிந்தபிறகு சுணக்கமாக இருந்த பட்டு சேலை வியாபாரம் ஏப்ரல், மே மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அதிகம் இருக்கும் என்பதால் பட்டுச்சேலை வியாபாரம் சூடுபிடிக்கும் என்று நெசவாளர்கள் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள 25 நாட்களிலேயே நெசவாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இதனைத் தொடர்ந்து மே 3ம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்து வந்தாலும், மே 3ம் தேதி ஊரடங்கு நிறைவடைந்த பிறகு நெசவாளர்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப ஏறக்குறைய 6 மாதங்களுக்கு மேலாகும்.

எனவே, கொரோனா பாதிப்பால் நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் உதவித்தொகையாக மாதம் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இதனைத் தொடர்ந்து நெசவாளர்கள் தொழில் செய்ய ஏதுவாக நெசவாளர்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதுடன், நெசவாளர்களுக்கு முன்கடன் வழங்கி நெசவுத்தொழிலாளர்களின் துயர்போக்கி நெசவுத்தொழில் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்த சேலைகளை கூட விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அரசின் உதவித்தொகையை எதிர்பார்த்து நெசவாளர்கள் பரிதாபத்துடன் காத்திருக்கின்றனர்.

Related Stories: