கொரோனா அச்சுறுத்தல் நேரத்தில் அரசியல் விளையாட்டு வேண்டாம்:கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று ராயபுரத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான புரட்சி நடைபெற்று வருகிறது. இதில், அரசோடு மக்கள் கைகோர்க்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கும், முதல்வர் பொது நிவாரண நிதிக்கும் நிதி அளிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தவறான கருத்தை பதிவிட்டு உள்ளார். நாட்டு படகு வைத்திருப்பவர்கள் 8 நாட்டிக்கல் மைல்தான் கடலில் மீன்பிடிக்க செல்ல முடியும். நம்முடைய எல்லையில் வெளிநாட்டு கப்பல் எப்படி மீன் பிடிக்க முடியும். அவர், மலிவான அரசியல் செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் கமல்ஹாசன் அரசியல் செய்வதை விட்டுவிட்டு உரிய ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்கும். இந்த கொரோனா நேரத்தில் அரசியல் விளையாட்டு வேண்டாம் என்று கமல்ஹாசனை எச்சரிக்கிறேன். தலா 1000 ரூபாய் வீதம் நான்கரை லட்சம் மீனவர்களுக்கு நிதி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பி.சி.ஆர் கருவி போதிய அளவில் உள்ளதால் பயப்பட தேவை இல்லை. நோய் எதிர்ப்பு திறனை கண்டுபிடிக்க இதுவரை 24,000 ரேபிட் கருவிகள் வந்துள்ளன. வல்லுநர் குழு முதல்வருக்கு நாளை அறிக்கை அளிக்க உள்ளது. இதனடிப்படையில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார். மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஏதாவது, நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் தொழிலாளர் விரோத போக்கில் ஈடுபட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: