கொடைக்கானலில் தங்கி வேலை செய்த மேற்குவங்க மாநில தொழிலாளர் 68 பேருக்கு கொரோனா இல்லை: மருத்துவப் பரிசோதனையில் உறுதி

கொடைக்கானல்:  கொடைக்கானலில் வேலை செய்து வந்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த  68 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று  இல்லை மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விவசாயம் மற்றும் கட்டிடப்பணிகளை செய்ய மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 68 தொழிலாளர்கள் பல மாதங்களுக்கு முன் வந்தனர். இவர்களை லோக்காய் சர்தார் என்பவர் மூலம் கொடைக்கானலுக்கு வேலைக்கு வந்துள்ளனர். கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மேற்குவங்க மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.

அவர்கள் வைத்திருந்த உணவுப்பொருள், பணம் தீர்ந்து போனதால், அரசின் உதவியை நாடினர். வருவாய்த்துறையினர் இவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். அப்போது மேற்குவங்க தொழிலாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்ததை வருவாய்த்துறையினர் கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரும் கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். வடமாநில தொழிலாளர்கள் 68 பேர் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து 68 தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் ஆர்டிஓ சிவகுமார் கூறுகையில், ``மேற்குவங்க தொழிலாளர்கள் 68 பேரும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவ முடிவுகள் வந்துள்ளன. தடை உத்தரவு நீங்கிய பின், தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதுவரை அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்’’ என்று கூறினார்.

Related Stories: