மூணாறு சாலைகளில் தினமும் வலம் காட்டுயானை ‘ரெகுலர் விசிட்’: வாழைகளை துவம்சம் செய்வதால் மக்கள் அச்சம்

மூணாறு:  மூணாறில் நேற்று அதிகாலை காட்டுயானை படையப்பா மீண்டும் ஊருக்குள் புகுந்து சாலைகளில் ஜாலியாக உலா வந்தது. வாழை மரங்களை நாசம் செய்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்த யானைகள், விலங்குகள் வெளியேறி ஜாலியாக உலா வர துவங்கியுள்ளன. ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் காட்டுயானை 3 நாட்களுக்கு முன் காலனி மற்றும் அந்தோணியார் காலனி பகுதிகளில் நுழைந்து வாழை மரங்களை ஒடித்து நாசம் செய்தது. குடிநீர் குழாய்களையும் சேதப்படுத்தியது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் நடையார் எஸ்டேட் பகுதியில் இருந்து இந்த யானை மீண்டும் ஊருக்குள் இறங்கியது. மூணாறு முக்கிய சாலைகளில் சுதந்திரமாக உலா வந்தது. பின்னர் நல்லத்தண்ணி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாழை மரங்களை நாசம் செய்தது. விடிந்தவுடன்  தனியார் மருத்துவமனை வழியாக மீண்டும் நடையார் பகுதிக்கு சென்றது. மூணாறில் முக்கிய சாலைகளில் யானைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: