கரூர் மயானத்தில் கொரோனாவுக்கு பலியானவர் உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு: ரோட்டில் கட்டைகளை போட்டு தடுப்பு ஏற்படுத்தியதால் பரபரப்பு

கரூர்: கரூரில் கொரோனாவுக்கு பலியான முதியவர் உடலை அடக்க செய்ய அப்பகுதி மக்கள் தடுப்பு கட்டைகளை வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லை சேர்ந்த 96 வயது முதியவர் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது சடலத்தை சுகாதாரத்துறை அறிவித்த முறைகளை பின்பற்றி கரூர் பாலம்மாள்புரம் பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய போலீசார் ஏற்பாடு செய்தனர்.

இதுபற்றி அறிந்ததும் மயானத்தின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், பாலம்மாள்புரம் நுழைவு வாயில் பகுதியான மேம்பால பகுதிக்கு வந்து, இறந்த முதியவரின் உடலை இந்த மயானத்தில் புதைக்க கூடாது. வேண்டுமானால் எரித்துக்கொள்ளுங்கள் எனக்கூறினர். மேலும் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையின் நடுவே கட்டைகளை போட்டு தடுப்பு ஏற்படுத்தினர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். பின்னர் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முதியவர் உடல் புதைக்கப்பட்டது.

Related Stories: