ஊரடங்கால் வீதிக்கு வந்த தொழிலதிபர் குடும்ப விவகாரம்: 2 மனைவிகளுக்கு பயந்து நண்பர் வீட்டில் தஞ்சம்

பெங்களூரு:  பெங்களூரு கிழக்கு மண்டலத்தில்  வசித்து வருபவர் சாம்ராய் (30).  ஆயத்த ஆடை ஆலை நடத்தி வருகிறார்.  2017-ம் ஆண்டு சரோஜா (27) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக குடும்பம் நடத்தினர்.  இதற்கிடையில் தொழில் விஷயமாக வெளியே சென்ற சாம்ராய்க்கு லதா (26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை காதலிக்க தொடங்கினார். இந்த காதல், திருமணம் வரைக்கும் சென்றது. அதாவது சாம்ராய், லதாவை தனது முதல் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்க தொடங்கினார். சில நாட்கள் முதல் மனைவியுடன் குடும்பம் நடத்தும் அவர் பின்னர் சில நாட்கள் வேலை விஷயமாக வெளியே சென்று வருவதாக கூறி இரண்டாவது மனைவியின் வீட்டில் தங்கினார்.

இது குறித்து, முதல் மனைவிக்கு தெரியவந்ததும் சாமியாட தொடங்கினார். உடனே சாம்ராய்  முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியின் பெற்றோரின் உதவியை நாடினார். பின்னர் முதல் மனைவி வீட்டில் ஒருவாரம், இரண்டாவது மனைவி வீட்டில் ஒரு வாரம் இருப்பது என்று பேசி முடிவு செய்யப்பட்டது.  தற்போது கொரோனா வைரஸ்  வாயிலாக இடி விழுந்தது. ஊரடங்கு இருப்பதால் சாம்ராய் 2-வது மனைவி வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை ஏற்று கொள்ளாத முதல் மனைவி தனது வீட்டுக்கு வரும்படி சாம்ராயை வற்புறுத்தினார். ஊரடங்கு முடிந்ததும் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனாலும், அவரது முதல் மனைவி இதை ஏற்றுகொள்ளவில்லை. 2வது மனைவி சாம்ராயை வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். இதனால் முதல்மனைவி மகளிர் உதவி மையத்தில் புகார் அளித்தார். அவர்கள், ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு உங்கள் குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்கிறோம் என்று கூறிவிட்டனர். இரு மனைவிகளின் பிடிவாதத்தால் விரக்தி அடைந்த சாம்ராய் நிலைமையை சமாளிக்க தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று  தஞ்சமடைந்துள்ளார். தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள குடும்ப சூழ்நிலை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Stories: