கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்ய திருமணத்தை தள்ளிவைத்த நர்ஸ்: கோட்டயத்தில் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: கோட்டயத்தில் தனது திருமணத்தைவிட கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதே முக்கியம் என கூறி பணியாற்றிவரும் நர்ஸை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கேரள  மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சவுமியா. கண்ணூர்  அரசு  மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்,  திருக்கரிப்பூரை சேர்ந்த ரெஜி நரேனுக்கும் கடந்த 8ம் தேதி திருமணம்   நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் கொரோனா பரவியதால் லாக்-டவுன்   அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களின் திருமணம் வரும் 26ம்  தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் பணிக்கு வர   வேண்டாம் என சக ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை  அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சவுமியா அதை ஏற்காமல் தொடர்ந்து  பணியில் ஈடுபட்டார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்  டாக்டர்கள், நர்சுகள் 14  நாட்கள் பணியில் இருந்தபிறகு 14 நாட்கள் தனிமையில்  இருக்க  வேண்டும். இதனால் திட்டமிட்டபடி 26ம் தேதி திருமணத்தை நடத்த  முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரெஜி நரேனை அழைத்த சவுமியா,  நிலைமையை விளக்கி கூறினார்.  இதை ஏற்ற ரெஜி நரேன், அவரது  பணியை தொடர ஊக்கமளித்தார். இதையடுத்து சவுமியா தனது சேவையை தொடர்ந்தார். பணி  முடிந்து கடந்த சில  தினங்களுக்கு முன்பு அவர் உட்பட 20 நர்சுகள் அருகில் உள்ள ஓட்டலில்  தனிமையில் இருந்து வருகின்றனர்.  

இந்த நிலையில் திருமணத்தை பிறகு பார்த்து  கொள்ளலாம், மக்கள் சேவையே மகேசன் தொண்டு என கருத்தில் கொண்டு, வரும் 20ம்  தேதி  சவுமியா மீண்டும் பணிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து  சவுமியா கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. எல்லாம் சுபமாக முடிந்த பிறகு  திருமணம் குறித்து ஆலோசிக்கலாம் என்றார்.

ஏசி, பேன் விற்பனைக்கு அனுமதி

கேரளாவில் கொரோனா  தாக்கம் குறைந்து வருவதால் படிப்படியாக நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு  வருகின்றன. இந்த நிலையில் ஏசி மற்றும்  மின்விசிறி கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல்  மாலை 5 மணி வரை அதிக பட்சம் 3 ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மூக்குக்கண்ணாடி கடைகள்  திங்கட்கிழமைகளில் 2 ஊழியர்களுடன் செயல்படலாம்.  களிமண் ெதாழிலுடன்  தொடர்புடையவர்கள் தற்போது ஓராண்டுக்கு தேவையான மண் ேசகரிக்கும்  காலம் என்பதால், அவர்கள் வேலையில் ஈடுபடலாம். வீடுகளில் பணிபுரியும்  பீடி தொழிலாளர்கள் அதற்கான மூலப்பொருட்களை அந்தந்த நிறுவனங்களுக்கு சென்று  வாங்கிவரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை வலியுறுத்திய பிச்சைக்காரர்

ஊரடங்கு அமலில் இருப்பதால் கோழிக்கோடு அருகே பேராம்பிறா போலீசார்  3 பேர் கடை திண்ணையில் படுத்திருந்த பிச்சைக்காரருக்கு உணவு அளிக்க சென்றனர். போலீசாரை பார்த்த பிச்சைக்காரர் எழுந்து யாரும் அருகில் வர வேண்டாம் என்று ஆவேசமாக கூறினார். பின்னர் சற்று முன்னால் வந்து திடீர் என குனிந்தார். கல் எடுத்து வீசப்போகிறார் என்று போலீசார் திகைத்தனர். ஆனால் அவர் ஒரு இடத்தை காட்டி அங்கு உணவை வைத்துசெல்ல கூறினார். போலீசார் சாப்பாட்டை அங்கு வைத்தனர். அவர்கள் சென்றதும் அவர் எடுத்து சாப்பிட ெதாடங்கினார்.

ஒரு கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சி நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்த வீடியோவை பதிவிட்டு, ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் கேரள போலீசின் கருணை உணர்வும், பிச்சைக்காரரின் பாதுகாப்பு உணர்வும் பாராட்டிற்கு உரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பாதித்த பெண்ணிற்கு குழந்தை

கண்ணூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காசர்கோட்டை சேர்ந்த கொரோனா பாதித்த ஒரு கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.  குழந்தை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யப்படும். பெண் தற்போது உடல்நலம் தேறி வருகிறார் மேலும் ஒரு பரிசோதனை முடிவு வரவேண்டும். அதில் பாதிப்பு இல்லை என உறுதியானால் தான் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க முடியும் என்று டாகடர்கள் தெரிவித்தனர்.

Related Stories: