காலி ஸ்டேடியங்களில் கிரிக்கெட் போட்டியா? வக்கார் எதிர்ப்பு

கராச்சி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களை அனுமதிக்காமல் காலி ஸ்டேடியங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என்ற யோசனைக்கு பாகிஸ்தான் அணி பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ கான்பரஸ் மூலம் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வக்கார் கூறியதாவது: காலி ஸ்டேடியங்களிலாவது மிக விரைவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யலாம் என்ற யோசனையை ஏற்க மாட்டேன். என்னை பொறுத்த வரை இன்னும் 5 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகு போட்டிகளை நடத்தலாம் என நினைக்கிறேன்.

Advertising
Advertising

உலகம் முழுவதும் கோவிட்-19 நோயின் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு, ரசிகர்களை அனுமதிக்காமல் போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம். ஆனால் இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ உடனடியாக போட்டிகளை நடத்துவது ஏற்புடையதாக இருக்காது. அதே சமயம், கொஞ்சம் தாமதம் ஆனாலும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர் நடைபெற வேண்டும் என்றே விரும்புகிறேன்.  அது எங்களுக்கு மிக முக்கியமான தொடர். ஐசிசி கோப்பையை வெல்லும் பாகிஸ்தான் அணியில் ஏதோ ஒரு வகையில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு வக்கார் தெரிவித்துள்ளார்.

Related Stories: