கொரோனா எதிரொலி; தர்பூசணி பழங்களை சாலையில் உடைக்கும் விவசாயிகள்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் சாகுபடியான தர்பூசணி பழங்களை விவசாயிகள் அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாததால் சாலையில் உடைத்தனர். மத்திய, மாநில அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம், வீரணந்தபுரம், மடப்புரம், சின்னபுங்கநதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் தர்பூசணி பயிரிடப்பட்டு தற்போது அது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. ஆனால் கொரோனா வைரசின் தாக்கத்தினால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் அந்த பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாத சூழலில் பயிரிட்ட இடத்திலேயே பழங்கள் கடுமையான வெயிலில் அழுகி கிடக்கின்றன.

 இதனால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர். மேலும் ஒரு ஏக்கருக்கு 25ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து அந்த பணத்தை கூட எடுக்க முடியாத சூழலில் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சுமார் 25ஆயிரம் ரூபாய் வரை நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். அரசு நிவாரணம் வழங்கவில்லை என்றால் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை நிலவுகிறது.  

Related Stories: