ஏப்ரல் முதல் வாரத்தில் கிடைக்கும் முதியோர்கள், விதவைகளுக்கு முன்கூட்டியே 3 மாத பென்சன்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ‘நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை முன்னிட்டு, முதியோர்கள், கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்கூட்டியே 3 மாத ஓய்வூதியம் தொகை வழங்கப்படும்,’ என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஏழைகள், நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நிதி சலுகைகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே, ₹1.70 லட்சம் கோடிக்கான நிதி உதவியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அறிவித்தார். அதில், முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1000 கூடுதல் கருணைத் தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய சமூக உதவி திட்டத்தின் (என்எஸ்ஏபி) கீழ் ஏழை முதியோர், கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்கூட்டியே 3 மாத ஓய்வூதியத்தை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதனால், நாடு முழுவதும் ஓய்வூதியம் பெறும் 3 கோடி பேர் பயனடைவார்கள். தற்போது, என்எஸ்ஏபி திட்டத்தின் கீழ் 60-79 வயது வரையிலான முதியோருக்கு மாதம் ₹200ம், 80 வயது மேற்பட்டோருக்கு மாதம் ₹500ம் ஓய்வூதியம் தரப்படுகிறது. 40-79 வயது வரையிலான கணவனை இழந்த பெண்களுக்கு மாதம் ₹300ம், 80 வயது மேற்பட்டோருக்கு  ₹500ம் தரப்படுகிறது. 79 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ₹300ம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ₹500ம் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: