கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகளை தயாரிக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகளை தயாரிக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் அல்டோனா டயக்னஸ்டிக்ஸ், மைலேப் ஆகிய 2 நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கருவிகளை தயாரித்து வழங்க உரிமம் பெற்றுள்ளன. இந்திய நிறுவனமான மைலேப் தயாரித்துள்ள பரிசோதனை கருவி ஒன்றின் மூலம் 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ள உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் ஒரு கொரோனா பரிசோதனைக்கு ரூ.1,500 செலுத்த வேண்டும்.

அத்துடன் ஆய்வக செலவு போன்றவற்றை சேர்த்தாலும் ஒருவருக்கு பரிசோதனைச் செய்ய அரசு நிர்ணயித்த ரூ.4,500க்கு மிகாது. நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், அரசு அங்கீகாரம் செய்ய தனியார் ஆய்வகங்களுக்கு இன்றே சப்ளை தொடங்கிவிடும் என்று மைலேப் நிறுவனம் கூறியுள்ளது. மூலப் பொருட்கள் உள்நாட்டிலேயே கிடைப்பதால் கொரோனா பரிசோதனை கருவிகளை தயாரிப்பதில் தோல்வி ஏற்படாது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

அத்துடன் ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனமான அல்டோனா தயாரித்துள்ள பரிசோதனை கருவியை இந்தியாவில் அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்ய உள்ளது. மிக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் வருகை கொரோனா சந்தேகத்திற்குரிய அனைவரையும் பரிசோதனை செய்வதற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. கொரோனா தொற்றை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்தால் உயிரிழப்பை தடுக்கலாம் என்பதால் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு பெரும் வர பிரசாதமாக மாறியுள்ளது.

Related Stories: