கொரோனா பரவலை தடுக்க விசாரணை கைதிகளாக சிறையில் உள்ளவர்களை பிணையிலோ, பரோலிலோ விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : கொரோனா பரவலை தடுக்கும் மற்றொரு முயற்சியாக நாடு முழுவதும் விசாரணை கைதிகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிறைகளை காலியாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 186 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 415 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொற்றால் 7 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் சிறைகைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டு இருப்பவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனர். அதில் விசாரணை கைதிகளை பிணையிலோ அல்லது பரோலிலோ விடுவிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எதுபோன்ற குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்பது குறித்து முடிவெடுக்க உயர்நிலை குழு ஒன்றை அமைக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.விசாரணை கைதிகள் பலர் தலைகீழாக நின்று போராடியும் கிடைக்காத ஜாமீன் மற்றும் பரோலை தற்போது கொரோனா வைரஸ் தற்காலிகமாக கொடுக்கவைத்துள்ளது.  

Related Stories: