பாலியல் வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் நித்தியானந்தா, ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.5,000 கோடி சொத்துக்கள் முடங்க வாய்ப்பு

பெங்களூரு : பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை என்றால் அவரது சொத்துக்களை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நித்தியானந்தா மீதான பாலியல் புகார் வழக்கு, பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கிட்டத்தட்ட 45 முறை நித்தியானந்தா நேரில் ஆஜராகாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, அவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் ஜாமீனை ரத்து செய்ய லெனின் கருப்பன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து நித்தியானந்தாவின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதுடன் நீதிமன்ற விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி கடந்த மார்ச் 4ம் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, நித்தியானந்தா நேரில் ஆஜராகாததால் கர்நாடக போலீசாருடன் நித்தியானந்தா மற்றும் அவரது ஆசிரம சொத்து பட்டியலை ராம்நகர் நீதிமன்றம் கேட்டது.

மேலும் அடுத்தமுறை வழக்கு விசாரணையின் போது, நேரில் ஆஜராகவில்லை எனில் நித்தியானந்தா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நித்தியானந்தா இன்று ஆஜராகவில்லை எனில் அவரது சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புகள் உள்ளது. இதனிடையே நித்தியானந்தா, ஆசிரம அறக்கட்டளைக்கு சொந்தமாக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: