நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது கடந்த 2017ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவ கல்லூரிகள் சேர்ந்தார்கள் என்ற ஒரு எண்ணிக்கை எடுத்த பார்த்தோமானால் கிட்டத்தட்ட 10 மாணவர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை இரண்டிலிருந்து மூன்று மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றார்கள்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத் தொடரின் போது, தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவை 110ன் கீழ் நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அவை பின்வருமாறு,...

*மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வரப்படும்.

*நீட் தேர்வை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.நீட் நுழைவுத் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆகும் கனவு குறைந்துவிட்டது.

*நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

*நீட் அறிமுகமான பின்னர், மருத்துவக் கல்லூரியில் சேரும் நிலை குறைந்துவிட்டது.

*நீட் தேர்வு வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர பிரத்யேக  உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் இயற்றப்படும். அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்காக இந்த சட்டம் இயற்றப்படும்.

*அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.

*அரசு பள்ளி மாணவர்கள், குறைவாக சேர்வதற்கான காரணங்களை ஆய்வு செய்து, இந்த ஆணையம் ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்.

*உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்றார்.

Related Stories: