கைதான பெண் அதிகாரி போலீஸ் காவலில் உயிரிழந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி, கரூர் எஸ்.பி 4 வாரத்தில் அறிக்கை தர வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை:  திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி அருகே காதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ரமேஷ் (37). இவர், கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் பகுதியில் நிலம் வாங்கி அந்த நிலத்தை 17 வீட்டு மனைகளாக பிரித்துள்ளார். இந்த மனைகள் விற்பனை செய்வதற்காக மனைப்பிரிவு ஒப்புதல் பெறுவதற்கு க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணி (48) என்பவரை அணுகியுள்ளார். இதில் அவர் ஒப்புதல் வழங்க ₹34,000 லஞ்சம் கேட்டுள்ளார். ரமேஷ் 30,000 தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும் லஞ்சம் தர விரும்பாத ரமேஷ் இதுகுறித்து கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசாரின் ஆலோசனைப்படி ரமேஷ், ரசாயனம் தடவிய 30ஆயிரத்தை க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று ஜெயந்திராணியிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரேகா, ரூபாகீதாராணி, அருள்ஜோதி ஆகியோர் ஜெயந்திராணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து நீதிபதி வீட்டிற்கு சென்றதும் உடல்நிலை சரியில்லை என்று கூறியவாறு ஜெயந்திராணி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜெயந்திராணி இறந்தார். போலீஸ் காவலில் பெண் அதிகாரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இது சம்பந்தமாக நேற்று பத்திரிக்கையில் செய்தி வெளிவந்தது. இச்செய்தியை படித்து பார்த்த மாநில மனித உரிமை ஆணைய தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரித்துள்ளார். மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்புதுறை டிஜிபி மற்றும் கரூர் எஸ்பி ஆகியோர் 4 வாரத்தில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: