கவர்னர் கிரண்பேடியை விமர்சித்து பேச்சு நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய போலீசார் முயற்சி: நாளை ஆஜராவதாக எழுதி வாங்கினர்

குலசேகரம்: புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து பேசியதாக புகாரின்படி நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய சென்ற போலீசார், நாளை ஆஜராவதாக எழுதி வாங்கி சென்றனர். அரசியல் விமர்சகரும், மேடை பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார். இவர், நாடாளுமன்ற தேர்தலின்போது புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து கடந்த  ஆண்டு மார்ச் 27ம் தேதி தவளகுப்பம் பிரசார கூட்டத்தில், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி மாநில உள்துறை செயலாளர் சுந்தரேசன் புகாரின்படி தவளகுப்பம் போலீசார் 21ம் தேதி (நாளை) நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நாஞ்சில் சம்பத்துக்கு சம்மன் அனுப்பினர்.

நேற்று முன்தினம் சம்மனை பெற்று கொண்டவர், கொரோனா தாக்கம் காரணமாக 21ம் தேதிக்கு பிறகு ஆஜராவதாக கடிதம் அனுப்பினார். இந்தநிலையில் தவளக்குப்பம் போலீசார் நேற்று காலை திருவட்டாரில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்வதாக கூறினர். சம்மனே 21ம் தேதி வரும்படிதானே இருக்கிறது என்றார். அவரது வக்கீல்களும் ‘சம்மனுக்கு முன்பு கைது செய்ய முடியாது’ என்று வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, வக்கீல்கள் முன்னிலையில் சம்மனில் குறிப்பிட்டபடி 21ம் தேதி (நாளை) ஆஜராவதாக நாஞ்சில் சம்பத் எழுதி கொடுத்ததும் புதுச்சேரி போலீசார் திரும்பி சென்றனர்.

Related Stories: