தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா; வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு... அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி உலகளவில் 8,000 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 3 பேர் இறந்துள்ளனர். 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மக்கள் அதிகளவில் வெளியிடங்களில் கூட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்திலும் அதன் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.

நேற்றுவரை தமிழகத்தில் இரண்டு பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படியில் தமிழகத்தில் தியேட்டர், வணிக நிறுவனங்கள், சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

அயர்லாந்தில்  இருந்து கடந்த 17 ந்தேதி சென்னை வந்த 21 வயது மாணவர்  ஒருவருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் இருந்தவர்களை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞரின் உடல்நிலை சீராக இருக்கிறது. அந்த இளைஞர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: