நிர்பயா வழக்கு தூக்கு கைதி பவன் குப்தா மறுசீராய்வு மனு: உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி: நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா கடைசி முயற்சியாக, இளம் சிறார் உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா, தனது இறுதி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான். அதில், குற்ற சம்பவம் நடந்தபோது, பள்ளி சான்றிதழின்படி தான் 18 வயது நிரம்பாத சிறுவனாக இருந்ததாக குறிப்பிட்டு உள்ளான்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பவன் குப்தா ஏற்கனவே  கடந்த ஜனவரி 20ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்த போது, ‘டெல்லி உயர் நீதிமன்றமும், விசாரணை நீதிமன்றமும் அளித்த தீர்ப்பில் மீண்டும் தலையிட  முடியாது’ எனக் கூறி, ஜனவரி 31ம் தேதி மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இப்போதும் அதே காரணத்தை கூறி மறுசீராய்வு மனு தாக்கல்  செய்யப்பட்டதால், அதை  நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக, டெல்லி போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒவ்வொரு முறையும் அனைத்து நீதிமன்றத்திலும்  இளம் சிறார் உரிமை கோரி மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்ய அனுமதிப்பது நீதிமன்றத்தை கேலி கூத்தாக்கும் செயல்,’’ என்று வாதிட்டார். இதற்கிடையே, மற்றொரு குற்றவாளியான பவன் குப்தா குற்ற சம்பவம் நடந்த தினத்தில் தான் டெல்லியில் இல்லை என்று தாக்கல் செய்த மனுவை  கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று அவன் மேல்முறையீடு செய்தான். இதை விசாரித்த நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, ‘`விசாரணை நீதிமன்றம்  ஏற்கனவே விளக்கமாக அளித்த தீர்ப்பில் தலையிட முடியாது. மேலும், சாட்சியங்கள் மறைக்கப்பட்டதால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: