கடைகள் மூடுவது தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: கடைகள் மூடுவது தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரிய கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பெரிய கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தி.நகரில் ஒவ்வொரு கடையாக ஆய்வு மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாதாரண கடைகளை தொந்தரவு செய்யவில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகளையும், வணிக வளாகங்களையும் தான் மூட சொல்லி உள்ளோம்.

100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கும் இடம், நெரிசல் இருக்கும் கடைகளை மட்டுமே மூட சொல்லி அறிவுறுத்தியுள்ளோம். வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் விதமாக விளக்கம் அளித்து வருகிறோம். அவர்களும் இதனை புரிந்து கொள்கின்றனர் என்றார்.இதற்கிடையில், கடைகள் மூடுவது தொடர்பாக வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘சென்னையில் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மட்டுமே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பழம், காய்கறிகள், இறைச்சி, மீன் மார்க்கெட் உள்ளிட்ட மற்ற கடைகள், சிறிய கடைகளுக்குப் பொருந்ததாது. நமது முக்கியக் குறிக்கோள் வைரஸ் பரவலைத் தடுப்பது மட்டுமே. சாதாரண பொதுமக்களைப் பாதிக்கும் நடவடிக்கை அல்ல. வீண் வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும். இத்தகைய வதந்திகளைப் பரப்பும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Related Stories: