சூப்பர் டிவிஷன் ஹாக்கி ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும்  நடவடிக்கைகள் காரணமாக,  சென்னையில் நடந்து வந்த சூப்பர் டிவிஷன் ஹாக்கிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஹாக்கி சங்கம் சார்பில்  சூப்பர் டிவிஷன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2ம் தேதி தொடங்கியது. எழும்பூர் ஹாக்கி அரங்கில் நடந்து வந்த இந்தப் போட்டியில்  இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இணைப்பு பெட்டித் தொழிற்சாலை, இந்திய உணவுக் கழகம், வருமான வரித்துறை, தெற்கு ரயில்வே, சென்னை சிட்டி போலீஸ், தமிழ்நாடு காவல்துறை என 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

பள்ளி, கல்லூரி, திரையரங்குகள்  ஆகியவற்றை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து  சென்னையில் நடந்து வந்த சூப்பர் டிவிஷன் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியும் மார்ச் 31ம் தேதி வரை தள்ளி வைக்கப்படுவதாக  சென்னை ஹாக்கி சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தொழில்நுட்ப பிரதிநிதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதனை உறுதி செய்துள்ளார். ‘அரசு உத்தரவின் படியும், ஹாக்கி வீரர்கள், ரசிகர்கள் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப போட்டிகளுக்கான புதிய கால அட்டவணை பின்னர்  வெளியிடப்படும்’ என்று  சங்கத்தின் தலைவர் வி.பாஸ்கரன், எம்.எஸ்.உதயகுமார் ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.

Related Stories: