சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் உருவப் பட திறப்பு விழா பேராசிரியர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பேராசிரியர் அன்பழகன் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம் என்று மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.  மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உருவப் படத் திறப்பு விழா திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேராசிரியர் க.அன்பழகன் உருவ படத்தை திறந்து வைத்து பேசியதாவது:திமுக பொதுச் செயலாளராக 43 ஆண்டு காலம் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு கலைஞருக்கு பக்கபலமாக, துணையாக இந்த இயக்கத்தை கட்டிக் காத்தார். எனக்கு உயிரும், உடலும் தந்தவர் கலைஞர். எனக்கு உற்சாகமும், ஊக்கத்தைம் ஊட்டியவர் பேராசிரியர். இந்த நான்கும் தான் என்னை இந்த இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. பேராசிரியரை நான் பெரியப்பாவாகவே ஏற்றுக் கொண்டேன். அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது சாதாரண காரியம் அல்ல. அது மிக சிரமம். ஆனால் நானோ பேராசிரியரால் அதிகம் புகழப்பட்டவன். அந்த கர்வம் எனக்கு இன்னும் இருக்கிறது. எனக்கு வழிகாட்டியாக மட்டுமல்ல தந்தையாகவும் இருந்தார். மகனை போன்று நான் பேராசிரியரை கவனித்து கொண்டேன் என்று சமூக ஊடகங்களில் எழுதியிருக்கிறார்கள். சிலரும் சொல்லியிருக்கிறார்கள். அது தவறு. மகனை போல அல்ல பேராசிரியருக்கு நானும் மகன் தான். அவரே சொல்லியிருக்கிறார்.

ஸ்டாலின் கலைஞரின் வாரிசு மட்டுமல்ல. எனக்கும் ஸ்டாலின் வாரிசு தான் என்று பேராசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கலைஞர் அறிவாலயம் வந்த உடன் முதல் கேள்வியாக, பேராசிரியர் வந்துவிட்டாரா என்று தான் கேட்பார். வரவில்லை என்றால், போன் போட்டு வரச் சொல் என்பார். அவர் வந்த பிறகு எல்லா பிரச்னைகளையும் அவருடன் உட்கார்ந்து அலசி ஆராய்வார். விவாதிப்பார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். கலைஞருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலே ஓய்வெடுத்தார். அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீட்டில் இருந்தாலும், மருத்துவமனையில் இருந்தாலும் கலைஞர் கண்விழிக்கும் போதெல்லாம் பேராசிரியர் வந்திருக்கிறாரா என்று தான் கேட்பார். அவரும் வருவார். அவர் வந்ததை நாங்கள் சொன்ன பின்பு, கையை பிடித்து கொள்வார்கள். சிரித்து கொண்டே இருப்பார்கள். கலைஞர் அடிக்கடி எங்களிடத்தில் சொல்வார். பேராசிரியர் ஒருவரை மதிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அவரே என்னை மதிக்கும்படியாக செய்திருக்கிறேன் என்பது தான் எனக்கு பெருமை என்று கலைஞர் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். கலைஞர் மறைந்த போது பேராசிரியர் இருக்கிறார் என்ற மன நிறைவோடு நாம் இருந்தோம். அந்த பேராசிரியரும் மறைந்துவிட்டார். கலைஞர் மறைந்த பின்பு அவரது பணிகளில் சோர்வு வந்துவிட்டது. அவரது உடலில் சோர்வு வந்துவிட்டது. தொடர்ந்து கவனித்தோம். கலைஞர் மறைந்த பின்பு அவர் பேச்சை குறைத்து கொண்டார். அவருக்கும் உடல் பாதிப்பு ஏற்பட தொடங்கிவிட்டது. கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இன்று நிச்சயம் பேராசிரியரும் உயிரோடு இருந்திருப்பார்.

கலைஞர் மறைவை தாங்க முடியாத காரணத்தால் தான் பேராசிரியர் நம்மை விட்டு மறைந்து விட்டார் என்று கருதுகிறேன். அது தான் உண்மை. இந்த நேரத்தில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி, தமிழ் இன உணர்வும், தமிழ் மொழிப் பற்றும், திராவிட இயக்க கொள்கையும் கொண்டவர்களாக நாம் தொடர்ந்து வாழ வேண்டும். அவர் விட்டு சென்ற பணிகளை கலைஞர், பேராசிரியர் வழி நின்று நாமும் பாடுபட்டு பணியாற்ற உறுதி எடுப்போம். இவ்வாறுஅவர் பேசினார்.கூட்டத்தில் தி.க.தலைவர் வீரமணி, திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாகிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், இஜக பாரிவேந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் தலைவர் பொன்.குமார், பேராயர் எஸ்றா சற்குணம், உழைவர் உழைப்பாளர் தலைவர் செல்லமுத்து, தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் கதிரவன், வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் அம்மாவாசி, ஆதிதமிழர் பேரவை நிறுவனர் அதியமான், இனிக்கோ இருதயராஜ், சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன் மற்றும் இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Related Stories: