கொரோனா பீதியால் விற்பனை பாதிப்பு; அரியலூர் பண்ணைகளில் லட்சக்கணக்கான கோழிகள் உயிரோடு மடியும் அபாயம்

அரியலூர்: கொரோனா பீதியால் விற்பனை பாதிக்கப்பட்டதால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் லட்சக்கணக்கான கோழிகள் உயிரோடு இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சுமார் 175 கோழிப் பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் வளரும் கோழிகள் நாமக்கல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது கொரானா வைரஸ் பீதியால், கோழிகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கிலோ ரூ.150க்கு விற்ற கோழி, இப்போது 2 கிலோ ரூ.100க்கு கூவிக்கூவி விற்கும் நிலை உருவாகி உள்ளது. ஆனால் இதுவரை கோழிப்பண்ணை இருக்கும் பகுதிக்கு சென்று எந்தவித சுகாதார நடவடிக்கையும் கால்நடைதுறை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 175 கோழிப்பண்ணைகளிலும் கோழிகள், நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்படாததால் லட்சக்கணக்கான கோழிகள் குறிப்பிட்ட நாளை கடந்து எடை அதிகரித்து, நடக்க முடியாமல் உயிரிழக்கும் நிலையில் உள்ளன.

இதனால் பண்ணை உரிமையாளர்கள் கோழிகளை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான கோழிகள் உயிரிழந்து துர்நாற்றம் வீசத் துவங்கி உள்ளது.

இதுகுறித்து பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்கும் என்ற உத்தரவாதத்தில் வங்கிகளில் கடன்பெற்று பண்ணை அமைத்தோம். மத்திய அரசின் மானியம் இதுவரை வழங்கப்படாததால் வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் தற்பொழுது கொரானா வைரஸ் பீதியால் மேலும் இந்த தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழக அரசு கோழி பண்ணைகளை ஆய்வு செய்து நோய்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். வளர்க்கப்பட்ட கோழிகளை பரிசோதித்து கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றனர்.

Related Stories: