நெல்லை மாநகர பகுதியில் வாறுகால் இணைப்பால் கழிவு நீரோடைகளின் சங்கமமாகும் பாளையங்கால்வாய்

நெல்லை: பழவூர் அணைக்கட்டில் துவங்கி தெள்ளத்தெளிவான தண்ணீருடன் பாய்ந்தோடி வரும் பாளையங்கால்வாய் நெல்லை மாநகர பகுதிக்குள் நுழைந்ததும் சாக்கடைகள் சங்கமிக்கும் பகுதியாக மாறிவிடுகிறது. இதனால் தண்ணீர் மாசுபட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூங்குளம் பகுதியில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதி  தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. இரு மாவட்டங்களையும் வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மேலச்செவல் அருகே பழவூரில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து பாளையங்கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த கால்வாய் மேலச்செவல், தருவை, முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து நெல்லை மாநகர பகுதியான மேலப்பாளையம் சந்தனம்மாள்புரத்தில் துவங்கி பாளை, மூளிக்குளம், கோட்டூர், கீழநத்தம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து சானான்குளத்தில் முடிவடைகிறது.  பாளையங்கால்வாய் துவங்கும் இடமான பழவூர் அணைக்கட்டு பகுதியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தெள்ளத்தெழிவாக காணப்படுகிறது. அதனை அப்பகுதி மக்கள் குளிக்கவும், வீட்டு செலவுகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் நெல்லை மாநகர பகுதியான சந்தனம்மாள்புரம் முதல் மேலப்பாளையம், குறிச்சி, குலவணிகர்புரம், பாளை முருகன்குறிச்சி, மூளிக்குளம், கோட்டூர் உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியாகும் சாக்கடை கழிவுநீர் பாளையங்கால்வாயில் சங்கமிக்கின்றன. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் பாளையங்கால்வாய், நெல்லை மாநகர பகுதியில் சாக்கடைகள் சங்கமிக்கும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. பல கழிவுநீரோடைகளில் மனித கழிவுகளை நேரிடையாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் மேலகுலவணிகர்புரத்தில் அமைந்துள்ள பாதாள சாக்கடை உந்து நிலையத்தில் இருந்து கழிவுநீர் நேரிடையாக பாளையங்கால்வாயில் கலக்கும் வகையில் குழாய்கள் மூலம் விடப்படுகிறது. இதனால் தண்ணீர் முழுவதும் மாசுபட்டு காணப்படுகிறது. நெல்லை மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடைகளை பாளையங்கால்வாயில் கலப்பதை தடுக்க வேண்டும். கால்வாய் கரை முழுவதும் சிமென்ட் தளம் அமைக்க  வேண்டும். அமலை செடிகள், வேலிகாத்தான் செடிகள் முற்றிலும் அகற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பொதுநல ஆர்வலர்கள் எதிர்

பார்க்கின்றனர்.

Related Stories: