ரஞ்சி பைனல்: பெங்கால் ரன் குவிப்பு

ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு ஈடாக பெங்காலும் ரன் குவித்து வருவதால் கோப்பை யாருக்கு என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு ரஞ்சி கோப்பையின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 171.5ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 425ரன் குவித்தது. தொடர்ந்து விளையாடிய பெங்கால்  3வது நாளான நேற்று முன்தினம் 3விக்கெட் இழப்புக்கு   134ரன் எடுத்திருந்தது.  கைவசம் 7 விக்கெட், 291ரன் பின்தங்கிய நிலையில்  நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

களத்தில் இருந்த  சுதீப் சாட்டர்ஜி 81, விருத்திமான் சாஹா 64 ரன் என பொறுப்பாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 101ரன் சேர்த்தனர்.  அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 16 ரன்னில் வெளியேறினர். ஆனால் அனுஸ்தூப் மஜூம்தார் 58*, அர்னாப் நந்தி 28* ரன்னுடன் களத்தில் இருக்க பெங்கால் நேற்று ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன் குவித்துள்ளது. மொத்தம் 71ரன் பின்தங்கிய நிலையில் இன்னும் 4 விக்கெட் கைவசம் இருக்க, கடைசிநாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. ஆட்டம்  டிராவில் முடிய வாய்ப்பு உள்ளதால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுபவருக்கே கோப்பை.

அதனால் பெங்காலை சீக்கிரம் ஆட்டமிழக்க வைக்க சவுராஷ்டிரா முனைப்புக் காட்டும். அதேபோல் சவுராஷ்டிராவை முந்த பெங்காலும் வேகம் எடுக்கும். எனவே, கடைசிநாளான இன்று ஆட்டத்தில் சூடு பறப்பது நிச்சயம்.

Related Stories: