கால்பந்து போட்டியில் சோகம்; சக வீரருடன் மோதி நைஜீரிய வீரர் மரணம்: மைதானத்தில் அழுது புரண்ட வீரர்கள்

அப்யூஜா: நைஜீரிய பிரீமியர் லீக்கின் கிளப்பான நசராவா யுனைடெட் அணியின் சார்பில் பிரபல கால்பந்து வீரர் மார்ட்டின்ஸ் விளையாடினார். ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்குள், மார்ட்டின்ஸ் மற்றொரு வீரருடன் மோதும்போது சரிந்து விழுந்து மயக்கமடைந்தார். அதிர்ச்சியடைந்த அணி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு மார்ட்டின்சை ஆம்புலன்சில் எடுத்து சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால், ஒட்டுமொத்த கால்பந்து விளையாட்டு உலகமே சோகமடைந்து மார்ட்டின்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. மார்ட்டின்ஸ் மரண தகவலால், ஒட்டுமொத்த வீரர்களும் மைதானத்தில் படுத்து புரண்டு அழுத சம்பவ வீடியோ இணையத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

இதுகுறித்து நசராவா யுனைடெட் அணியின் தலைவர் ஐசக் டான்லாடி கூறுகையில், “மார்ட்டின்ஸ் விளையாடி கொண்டிருக்கும் போது, சக வீரருடன் மோதும்போது திடீரென சரிந்தார். டல்ஹாட்டு அராஃப் சிறப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நைஜீரிய கால்பந்துக்கு இது ஒரு சோகமான நாள்; நாங்கள் பெரிய இழப்பைச் சந்தித்துள்ளோம். இருந்தும், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்பார்க்கிறோம். அதன்பின், அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுப்போம். வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால், அது குறித்தும் விசாரிக்கப்படும்’’ என்றார். இருப்பினும், நைஜீரிய கால்பந்து மைதானங்களில் விளையாடும்போது ஏற்கனவே மூன்று மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

கடந்த 1954ல் மார்ட்டின்ஸ் சரிந்தது போன்றே டேவிட் ஓமோஃபே என்ற வீரர் லாகோஸ் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார். 1974ம் ஆண்டில் ஜான் அகண்டே ஒரு எதிரணி வீரருடன் மோதியதில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இறந்தார். 1995ல் மொசாம்பிக்கின் மாக்சாகீனுக்கு எதிரான போட்டியில் ஜூலியஸ் பெர்கரின் அமீர் ஆங்வேவும் சக வீரருடன் மோதும் போது சரிந்து விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: