3 ஏவுகணைகள் ஏவி வடகொரியா சோதனை: தென்கொரியா குற்றச்சாட்டு

சியோல்: ஒரே வாரத்தில் 2வது முறையாக வடகொரியா நேற்று 3 ஏவுகணைகளை சோதனை செய்தது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதில் நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால் கொரோனா வைரசை புறந்தள்ளி வழக்கம்போல அணுஆயுத சோதனையில் வடகொரியா கவனம் செலுத்தி வருகின்றது.

வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதன் காரணமாக இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரு நாட்டு தலைவர்களும் மூன்று முறை பேச்சவார்த்தை நடத்தியது.

இதனையடுத்து சில ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வடகொரியா அணு ஆயுத தளங்களை அழித்தது. எனினும் அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கவில்லை. இந்நிலையில் வடகொரியா மீண்டும் தனது ஏவுகணை சோதனையை தொடங்கி நடத்தி வருகின்றது. கடந்த வாரம் அதிபர் கிம் மேற்பார்வையில் குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. ஒரு வார காலத்திற்குள்ளாக நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டி உள்ளது.

Related Stories: